சொற்குவை

  சொற்குவை

  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு.

  (திருக்குறள்: 1)

  அகரமுதலித் துறையின் வரலாறும் செயற்பாடுகளும் எதிர்காலத் திட்டங்களும்

  ஒரு நாட்டைக் காப்பதற்கு இராணுவ வீரர்கள் எவ்வளவு அவசியமோ, அதுபோல, மொழியைக் காப்பதற்குச் சொற்கள் அவசியம். சொற்களைப் பாதுகாத்துப் புழக்கத்தில் வைத்திருந்தால்தான் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். மொழியில் வழங்கும் சொற்கள் அனைத்தையும் தொகுத்து ஆவணப்படுத்தி வைப்பது என்பது இனிவரும் தலைமுறையினருக்கு நாம் வழங்கும் ‘மொழிச் சொத்து’ ஆகும். சொற்களைச் சேர்த்து வைக்கத் தவறினால் அடுத்த தலைமுறையினரின் பயன்பாட்டிற்குச் சொல் பற்றாக்குறை ஏற்பட்டு, தன் தேவைக்கான சொற்களைப் பிற மொழிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டியிருக்கும். அவ்வாறு கடன் பெறும் சொற்களின் எண்ணிக்கை மிகுந்தால் தாய்மொழியின் தனித்தன்மை பாதிக்கப்படும். தமிழ்மொழியின் தனித்தன்மை பாதிக்காமல் இருக்க சொற்களைச் சேமித்துக்காக்கும் வைப்பகமாக (Bank of Words) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

  தமிழ் அகராதியை உருவாக்குவதற்கென்றே தனி இயக்ககமாகச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் துறைத்தலைமை அலுவலகமாக (Head of the Department) 08.05.1974-ஆம் நாள் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்டது. ‘மொழி ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்கள் முதல் இயக்குநராகப் பணியமர்த்தம் செய்யப்பட்டார்.

  இந்த இயக்ககம் தமிழில் உள்ள சொற்களைத் தொகுத்து அந்தச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் விளக்கம் கூறி, இலக்கண இலக்கியங்களிலிருந்து தக்க சான்றுகளை எடுத்துக்காட்டி, அச்சொற்கள் தோன்றுவதற்குக் காரணமாக உள்ள வேர்ச்சொற்களையும், அதன் வழியே மக்களின் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறை, வரலாறு ஆகியவற்றையும் எடுத்தியம்புகிறது.

  தமிழ்நாடு அரசின் துறைத் தலைமை அலுவலகமாக இயங்கும் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” இதுவரை 13,327 பக்கங்களைக் கொண்ட 31 அகரமுதலிப் பகுதிகளை வெளியிட்டுள்ளது.

  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி திருந்தியப் பதிப்பு

  அகராதிப் பணி என்பது முடிவுறும் பணி அல்ல. காலத்திற்குக் காலம் மேம்படுத்தப்பட வேண்டிய தொடர் பணியாகும். புழக்கத்தில் இல்லாத கடுமையான சொற்களை நீக்கியும் நவீன அறிவியல் காலத்திற்கேற்ற வகையில் புதிய சொற்களைச் சேர்த்தும் புதிய அகராதிகளை உருவாக்கும் பணியைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் திருந்திய பதிப்புப் பணியை மேற்கொண்டு, அதனை 31.12.2018ஆம் நாள் நிறைவுச் செய்திருக்கிறது. அச்சுக்கு அனுப்பும் முன் கூர்ந்தாய்வு செய்யும் பணியைச் செய்வது தொடர்பாக அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டு, அது அரசின் ஆய்வில் உள்ளது. உரிய அரசாணை கிடைக்கப் பெற்றதும் கூர்ந்தாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு திருந்திய பதிப்பு அச்சுக்கு அனுப்பப்படும்.

  தமிழ்க் கலைக்கழகம்

  இன்றைய அறிவியல் தொழில்நுட்பக் காலத்தில் சமூக ஊடகங்களிலும், மக்களின் பேச்சுவழக்கிலும் கலந்து புழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொற்களையும், நாள்தோறும் பெருகி வரும் பலதுறை சார்ந்த பிறமொழிக் கலைச்சொற்களையும் தொகுத்து, அவற்றிற்கு இணையான நல்ல தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைப்பதற்கு இந்த அகரமுதலித்துறையில் “தமிழ்க்கலைக் கழகம்” ஒன்று உருவாக்கப்பட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

  அகரமுதலித்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பதிப்பாசிரியர்களாலும், தொகுப்பாளர்களாலும் தொகுக்கப்பட்டு, வடிவமைக்கப்படும் தமிழ்க் கலைச்சொற்கள், மாதம் இரு முறை நடைபெறும் தமிழ்க்கலைக்கழகக் கூட்டத்தின்போது, தமிழறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், சொல்லாக்க வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழுவின் கூர்ந்தாய்வுக்குப்பின், தமிழ்நாடு அரசின் அரசாணை பெற்று, பொதுமக்கள் மற்றும் ஊடகத்தாரின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெற்றுள்ள 40 கூட்டங்களில் அகரமுதலித் திட்ட இயக்ககப் பதிப்பாசிரியர்கள், உதவிப் பதிப்பாசிரியர், தொகுப்பாளர்களால் தொகுக்கப்பட்ட சொற்கள் 22,637 அவற்றுள் வல்லுநர்குழு ஏற்பளித்த சொற்கள் 10,094.

  நற்றமிழ் அறிவோம்

  இளைய தலைமுறை பள்ளி மாணவர்களுக்குப் பிறமொழிக் கலப்பில்லாத தமிழை அறிமுகம் செய்யும் நோக்கில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, “நற்றமிழ் அறிவோம்” என்னும் தூய தமிழ் அகராதியை இவ்வியக்ககம் தயாரித்து 50,000 படிகள் அச்சிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன.

  அதன் தொடர்ச்சியாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான “நற்றமிழ் அறிவோம்” எனும் தூய தமிழ் அகராதியை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான கருத்துரு அனுப்பப்பட்டு அரசின் ஆய்விலுள்ளது. அரசாணை கிடைக்கப்பெற்றதும் அச்சிட்டு நூலாக வெளியிடப்படும்.

  சுருக்கப் பதிப்பு

  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள 31 அகரமுதலிப் பகுதிகளின் ‘சுருக்கப் பதிப்பு’, 884 பக்கங்களைக் கொண்ட ஒரே பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.

  தமிழ் வினைச்சொல் அகரமுதலி

  தமிழில் உள்ள வினைச்சொற்களைத் தொகுத்து 408 பக்கங்களைக் கொண்ட “தமிழ் வினைச்சொல் அகரமுதலி” வெளியிடப்பட்டுள்ளது.

  வேர்ச்சொல் சுவடி

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் பங்குபெறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் “வேர்ச்சொல் சுவடி” எனும் நூல் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

  அகரமுதலியை எண்மியமாக்கி வலைத்தளத்தில் வெளியிடும் பணி

  இந்த இயக்ககம் இதுவரை வெளியிட்ட 13,327 பக்கங்களைக் கொண்ட 31 பகுதிகளையும் எண்மிய (Digitize)மாக்கி வலைத்தளத்தில் வெளியிடுவதற்குச் சட்டமன்ற அறிவிப்பு 2016-17ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்தப் பணி நிறைவடைந்து தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அகரமுதலித் திட்ட இயக்ககத்திற்கென தனி வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பெற்று, இனிவரும் காலங்களில் இவ்வியக்ககப் படைப்புகள் அனைத்தும் அந்த வலைத்தளம் வழியே வெளியிடப்படும்.

  (2018-19) ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகளும் செயல் முன்னேற்றங்களும்

  1. நடைமுறைத் தமிழ்ப் பேரகரமுதலி: 2019 மார்ச்சு மாதத்திற்குள் 8 ஆயிரம் சொற்கள் 400 பக்கங்கள் என்ற இலக்குடன் பணி நிறைவடைந்து, தட்டச்சு மற்றும் கூர்ந்தாய்வு நிலையில் உள்ளது.

  2. மாணவர் இலக்கியத் தமிழ் அகரமுதலி: 2019 மார்ச்சு மாதத்திற்குள் 10 ஆயிரம் சொற்கள் 400 பக்கங்கள் என்ற இலக்குடன் பணி நிறைவடைந்து, தட்டச்சு மற்றும் கூர்ந்தாய்வு நிலையில் உள்ளது.

  3. தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அகரமுதலி: 2019 மார்ச்சு மாதத்திற்குள் 10 ஆயிரம் சொற்கள் 400 பக்கங்கள் என்ற இலக்குடன் பணி நிறைவடைந்து, தட்டச்சு மற்றும் கூர்ந்தாய்வு நிலையில் உள்ளது.

  4. தமிழ்க் கலைக்கழகத்தைப் புதுப்பித்து மாதம் இரு முறை வல்லுநர்கள் குழுக்கூட்டத்தை நடத்தி மாதத்திற்கு 1000 கலைச்சொற்களை உருவாக்குதல்: பிப்ரவரி 2019 வரை 32 கூட்டங்கள் நடத்தப்பெற்று 16,929 புதியக் கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டு 6797 சொற்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனைத்தும் ‘சொற்குவைத்’ திட்டத்தில் சேர்க்கப்பட்டு இணையத்தின் வழியாகப் பொதுவெளியில் வெளியிடப்படும்.

  5. அலுவலகப் பயன்பாட்டிற்குப் பார்வை நூல்கள் வாங்க ரூபாய் இரண்டு இலட்சம்: பிப்ரவரி 2019க்குள் ரூபாய் 2 இலட்சத்திற்கு 1220 நூல்கள் வாங்கப்பெற்றுப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

  6. அலுவலக உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொள்ள ரூபாய் இரண்டு இலட்சத்து முப்பதைந்தாயிரம்: 2 கணிப்பொறிகள் மற்றும் ஒளி அச்சுக் கருவிகளை எல்காட் (ELCOT) நிறுவனம் வழியாக வாங்கிப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

  இயக்கப் பணிகளின் தனிச்சிறப்பு

  1. மற்ற இயக்ககத்திற்கு ஒரு நூலைத் தயாரித்து வெளியிட அரசு ஆணை வழங்கினால் அந்த இயக்ககத்தினர் அந்த நூலைத் தயாரிப்பதற்கான அறிஞரை அணுகி அயலாக்கப் பணி (Out Sourcing) வாயிலாக அதனை நிறைவுறுத்துவர். ஆனால், இந்த இயக்ககத்திற்கென வழங்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் செய்யப்படும் நூல் உருவாக்கப் பணிகள் அனைத்துமே இந்த இயக்ககத்தின் பணியாளர்களான தொகுப்பாளர்கள், உதவிப் பதிப்பாசிரியர், பதிப்பாசிரியர்கள், கணிப்பொறியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினரைக் கொண்டு இந்த இயக்கக இயக்குநரின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படுகின்றன.

  2. இந்த இயக்ககத்தின் வாயிலாக வெளியிடப்படும் அனைத்துப் படைப்புகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டியுள்ளதால், மிக மிகக் கவனத்தோடும், பிழையேதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற விழிப்புணர்வுடனும் இந்த இயக்ககப் பணியாளர்கள் பணி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதே இந்த இயக்ககத்தின் பணிகளுக்கும் பணியாளர்களுக்கும் இயக்குநருக்கும் உள்ள தனிச்சிறப்பாகும்.

  3. திராவிட மொழிகள் உள்ளிட்ட இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் வேர்ச்சொற்கள் பெரும்பாலும் தமிழில் இருந்தே எடுத்துக் கையாளப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்கும் வகையில் சொற்களின் வேர்களைக் கண்டறிந்து அவற்றை அகராதியாகத் தொகுத்து வெளியிட வேண்டிய பெரும் பணி அகரமுதலி இயக்ககத்தைச் சார்ந்தது.

  எதிர்காலத் திட்டங்களும் தேவைகளும்

  1. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் என்ற நீண்ட பெயரைச் சுருக்கி ‘தமிழ் அகராதித்துறை இயக்ககம்’ (Directorate of Tamil Dictionary) என்று பெயர் மாற்றுவது (அரசுக்கு தனியாக கருத்துரு அனுப்பப்படும்).

  2. இந்த இயக்ககத்தில் உள்ள தொகுப்பாளர் என்ற பதவிப் பெயரை – உதவி இயக்குநர் என்று பெயர் மாற்றுவது (அரசுக்கு தனியாக கருத்துரு அனுப்பப்படும்).

  3. இத்துறை இயக்குநர் பணியிடத்திற்கு தற்போது துணை இயக்குநர் பணியிடத்திற்கான சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்றி மற்ற துறை இயக்குநருக்கு வழங்கப்படும் ஏற்ற முறை சம்பளத்துக்கு நிகராக இந்தத்துறை இயக்குநருக்கும் ஏற்ற முறை சம்பளம் வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

  4. ‘சொல்வயல்’ என்ற பெயரில் மாத இதழ் தொடங்குதல்.

  5. தனியர் படைக்கும் அகராதி மற்றும் அகராதியியல் நூல்களை பதிப்பிக்கும் பணியை மேற்கொள்ளுதல்.

  6. அகராதியியல் / சொற்பிறப்பியல் சான்றிதழ் – பட்டயப்படிப்பைக் கற்பித்தல் மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் திட்டம்.

  7. திராவிடமொழி இனச்சொல் அகரமுதலி உருவாக்குதல்

  8. மயங்கொலிச் சொல்லகராதி உருவாக்குதல்

  9. தமிழ் மரபுத்தொடர் அகரமுதலி உருவாக்குதல்

  10. ஆங்கிலம் - தமிழ் அகரமுதலியைத் தொகுத்து வெளியிடுதல்

  11. சொல்லாய்வில் ஈடுபடும் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குத் துணை செய்யும் வகையில் தனியாக ஒரு பன்மொழி அகராதியியல் மற்றும் மொழிபெயர்ப்பு நூலகம் அமைத்தல்

  12. வீரமாமுனிவர் மற்றும் தேவநேயப் பாவாணர் பெயரில் அகராதியியல் வல்லுநர்களுக்கு விருது வழங்குதல்

  13. அகராதிகளின் அவசியத்தைத் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வீரமாமுனிவர் பிறந்த நாளான நவம்பர் 8ஆம் நாளைத் ‘தமிழ் அகராதியியல் நாளாகக்’ கொண்டாடுதல்

  14. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகராதியியல் மாநாடு நடத்துதல்

  15. அகராதியியலைப் பற்றிய விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்தும் வகையில் ஆறாம் வகுப்பு முதற்கொண்டே பாடத்திட்டத்தில் ‘அகராதியை அறிவோம்’ என்னும் பாடத் தலைப்பைச் சேர்த்தல்

  16. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கம் குறித்த வினாக்களைச் சேர்ப்பதற்கு வழிவகை ஏற்படுத்துதல்

  17. அகரமுதலித் திட்ட இயக்ககம் உலகம் முழுமைக்குப் பொதுமையான தமிழ்ச்சொற்களை உறுதிப்படுத்தும் தகுதியைப் (அங்கீகாரம்) பெறுதல் போன்ற 4 முதல் 17 வரையிலான அனைத்து பணிகளுக்கும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

  18. மேற்கண்ட பல்வேறுத் திட்டப் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்துக் கொண்டிருக்கும் இந்த இயக்ககம், தற்போது பழுதடைந்த பழைய கட்டடத்தில் 2400 சதுர அடி பரப்பளவில் இயங்கி வருகிறது. போதுமான பராமரிப்போ, அறிஞர்கள் வந்து செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான அணுகு சாலைகளோ, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியோ இல்லாதக் காரணங்களினால் இயக்ககத்தை அதிக பரப்பளவுடன் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு இடத்திற்கு மாற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இத்தனைத் திட்டப் பணிகளையும் தொய்வில்லாமல் செய்து முடிக்கக் கூடுதல் பணியிடங்களை வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

  19. ‘சொற்குவைத்’ திட்டத்தின் வாயிலாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், மருத்துவம், சட்டம், வேளாண்மைப் போன்ற பல்துறை பல்கலைக்கழகங்களுக்கும் சென்று கலைச்சொற்களை உருவாக்கும் பணிகளை அகரமுதலித்துறை இயக்ககம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், ஏற்கனவே இதற்கெனத் தொடங்கப்பட்டு தற்போது இயங்காமலிருக்கும் அறிவியல் தமிழ்மன்றத்தை, இந்த இயக்ககத்தோடு இணைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

  20. திரைப்படத் தணிக்கை குழு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு, மதுரை உலகத் தமிழ்ச் சங்க ஆட்சிமன்ற குழு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆட்சி மன்றக் குழு மற்றும் செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரசு நிதி உதவிப் பெறும் தமிழ்ச் சார்ந்த நிறுவனங்களில் ஆட்சி மன்ற உறுப்பினராக அகராதித்துறை இயக்குநரையும் நியமனம் செய்வதற்கு கருத்துரு அனுப்பப்படும்.

  அகரமுதலி என்பது...
  தமிழ் மொழியின் ஆணிவேர்!
  தமிழ்ச் சொற்களின் பாதுகாப்பு அரண்!
  அனைத்துத் துறைகளின் தமிழ்க் கலைச் சொற்களையும் உருவாக்கும் அறிவுத் தொழிற்சாலை!
  தமிழ்ச் சொற்களின் வரலாற்றுப் பெட்டகம்!
  சொற்களின் காப்பகம்
  ஐயம் களையும் தீர்ப்பகம்
  சொல் தொடர்பாகத் தீர்ப்பளிக்கும் நீதிமன்றம்
  பண்பாட்டுப் பதிவகம்

  அகரமுதலித்துறையை வளர்த்தெடுப்பதன் வாயிலாக அன்னைத் தமிழை வளமையாக்குவோம்.

  இயக்குநர்கள் பட்டியல்
  24.05.2018 - இதுநாள் வரை
  திரு.த.காமராசு
  இயக்குநர்
  15.06.2017 - 30.04.2018
  முனைவர் கோ.செழியன் எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி.,
  இயக்குநர்
  13.06. 2016 - 10.06. 2016
  முனைவர் கோ.செழியன் எம்.ஏ.,எம்.ஏ., எம்.ஃபில்.,பிஎச்.டி.,
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  01.10. 2011 - 11.06. 2016
  முனைவர் கா.மு.சேகர் எம்.ஏ., எம்.ஃபில்.,பிஎச்.டி.,
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  02.09.2011 - 30.09.2011
  திரு.கூ.வ.எழிலரசு எம்.ஏ., எம்.ஃபில்.,பி.எட்.,
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  02.09. 2008 - 01.09.2011
  முனைவர் இரா.மதிவாணன் எம்.ஏ., எம்.ஃபில்.,பிஎச்.டி.,
  மதிப்புறு இயக்குநர்
  17.06. 2008 - 01.09. 2008
  திரு வை.கண்ணபுரக் கண்ணன் எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்.,
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  04.06.2008 - 16.06. 2008
  முனைவர் ம.இராசேந்திரன் எம்.ஏ.,பி.எட்.எம்.ஃபில்.,
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  16.11.2007 - 03.06.2008
  திரு கோ.சந்தானம் இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  04.01.2007 - 15.11.2007
  திரு து.இராசேந்திரன் இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  22.05.2006 - 03.01.2007
  திரு இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  22.06.2005 - 21.05.2006
  முனைவர் பு.ஏ.இராமையா இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  17.07.2001 - 21.06.2005
  திரு தா.சந்திரசேகரன் இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  29.06.2001 - 16.07.2001
  முனைவர் பு.ஏ.இராமையா இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  05.07.1999 - 28.06.2001
  திரு சு.இராமகிருஷ்ணன் இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  25.11.1997 - 04.07.1999
  திரு த.ரா.சீனிவாசன் இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  01.02.1996 - 24.11.1997
  திரு வை.பழனிச்சாமி இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  22.11.1995 - 31.01.1996
  திரு இரா.கிறித்துதாசு காந்தி இ.ஆ.ப.
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  01.07.1994 - 21.11.1995
  திரு முத்துபிச்சை எம்.ஏ.,
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  19.06.1989 - 30.06.1994
  முனைவர் இரா. மதிவாணன்
  முதன்மைப் பதிப்பாசிரியர் - இயக்குநர்
  09.05.1988 - 18.06.1989
  இவ்வியக்ககம் தமிழ்வளர்ச்சி இயக்ககத்துடன் இணைக்கப்பட்டது
  28.01.1981 - 08.05.1988
  திரு இரா. மதிவாணன்
  இயக்குநர் முழுக்கூடுதல் பொறுப்பு
  08.05.1974 - 16.01.1981
  “மொழி ஞாயிறு”
  ஞா.தேவநேயப் பாவாணர்
  இயக்குநர்